குக்கரில் வெந்த இலை!

சூரியனின் செயல்திட்டம் என்ன?
டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
Published on

ஆர். கே.நகர் தேர்தல் முடிவுகள் வெளியானதும் பொதுவாக விஷயமறிந்த எல்லோரும் சொன்னது, ‘இதுதான் எனக்கு முன்பே தெரியுமே' என்பதுதான்.

தினகரன் வென்றிருப்பது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆச்சரியமாக இல்லை என்றாலும் வெளி மாநிலங்களைப் பொறுத்தவரை ஆச்சரியம்தான். அதுவும் ஆர்.கே. நகரில் முன்பு ஜெயலலிதா பெற்ற வாக்குகளை விட அதிகமாகப் பெற்று வென்றுள்ளார் என்பதைக் கண்டு ‘ஒரு சுயேச்சை வேட்பாளர் எப்படி' என்று வியக்கிறார்கள்.

இந்த வெற்றியால் உடனடியாகத் தமிழ்நாட்டு அரசியலில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்று அரசியல் நோக்கர்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். ஜெ. மறைவுக்குப் பின் அரசியல் சூழல் கொந்தளிப்பாகவே இருக்கிறது. கொலைப்பழி சூட்டப்பட்ட சசிகலா குடும்பத்திடம் இருந்து அதிமுகவை மீட்பதற்காக நடத்திய தர்மயுத்தத்தைப்  பார்த்துக்கொண்டிருக்கும்போது, இந்தத் தேர்தல் முடிவு சுவாரசியமான திருப்பமேதான். கடந்த காட்சியில் வில்லனாக சித்தரிக்கப்பட்டவர் அடுத்த காட்சியிலேயே ஹீரோவாக நிலைகொள்ளும் மாயாவாத எதார்த்தக்காட்சி.

இந்த வெற்றியை ஆராயவேண்டுமானால் ஆர்.கே. நகர் தேர்தல் முதலில் தள்ளிவைக்கப்பட்ட சூழலில் இருந்து தொடங்கவேண்டும்! ‘‘ ஓட்டுக்கு சில ஆயிரங்களைக் கொடுத்த புகாரில்தான்  இந்த தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அத்துடன் தினகரனும்கூட சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்ததாகக் கைது செய்யப்பட்டார். இத்துடன் அதிமுகவினரும் திமுகவினரும் தொகுதியைவிட்டு வெளியேறி விட்டார்கள். ஆனால் தினகரனும் அவரது ஆதரவாளர்களும் தொகுதியைவிட்டு வெளியேறவில்லை. அவர்கள் தங்கள் மீட்புக்கு ஒரே வழியாக இந்தத் தொகுதியை நம்பினார்கள்,'' என்கிறார் ஆர்.கே. நகரில் களப்பணியாற்றியாற்றிய அரசியல் பிரமுகர் ஒருவர்.

‘‘ பெரும்பாலும் கூலித்தொழிலாளர்களைக் கொண்டிருக்கும் அத்தொகுதியில் பண மதிப்பிழப்பினால் மக்கள் அன்றாடச் சிக்கல்களை எதிர்கொண்டிருந்த சூழலில் ஓட்டுக்காகக் கொடுத்த பணம் உதவிகரமாக இருந்தது. பல பெண்கள் அடகுக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த தங்கள் பொருட்களை மீட்டதைப் பார்க்க முடிந்தது. தங்களுக்காகத்தான் தினகரன் சிறைக்குச் சென்றார் என்ற எண்ணம் அவர்களிடம் உருவானது. அந்த எண்ணத்தைத்தான் ஆயிரம் வாக்குகள் கொண்ட வார்டுகளில் 400 பெண்கள் குக்கர் சின்னத்துக்கு வாக்கு கேட்டு சின்னம் ஒதுக்கப்பட்ட மறுநாளே வீதிகளுக்கு வந்ததில் புரிந்துகொள்ள முடிந்தது. முன்பு தினகரனுக்கு ஆதரவாக வாக்குக் கேட்ட ஈபிஎஸ்ஸும் எதிராக இருந்த ஓ.பி.எஸ்ஸும் ஓரணியில் வந்ததை அங்கிருக்கும் அடிமட்டத் தொண்டர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை! மதுசூதனனின் தோல்வியின் பின்னணியில் இருப்பது இதுதான். அத்துடன் கடைசி நாளில் வெளியான ஜெ சிகிச்சை பெறும் காட்சியும் உதவியது,'' என்கிறார் அவர்.

மு. க. ஸ்டாலின்
மு. க. ஸ்டாலின்

இப்போதைக்கு ஆளும் அ.தி.மு.க தரப்பு  இந்த வெற்றியைத் தொடர்ந்து சற்று ஆடிப்போயிருப்பது உண்மை. இவர்களுடன் இணக்கமாக இருப்பதாக நம்பப்பட்ட  முக்கிய பாஜக சார்பு பிரமுகர் ஒருவர் இந்தத் தோல்வியைத் தொடர்ந்து ஆண்மையற்ற அரசு என  வெளிப்படையாகச் சாடியிருப்பதும் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அம்சம். 

தினகரன் தரப்பைப் பொறுத்தவரை இந்த வெற்றி மிக முக்கியமான ஒன்றாகும். தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு, திஹார் சிறைவாசம், அதற்கிடையில் அதிமுக நிர்வாகம் கைவிட்டுப் போனது என்கிற பின்னடைவுகளுக்குப் பின் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. அவர் தன் அரசியல் எதிரிகளுக்கு தன்னை நிரூபித்திருக்கிறார். ஆனால் இதன் அரசியல் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இனி தி.மு.க பக்கம் வரலாம்.  தி.மு.க டெபாசிட் இழப்பது என்பது எப்படி இருந்தாலும் அக்கட்சிக்கு இழுக்குதான்.  ஏற்கெனவே அதிமுக பென்னாகரம் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்து அடுத்த ஆறுமாதத்தில் நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்ததை அவர்கள் ஆறுதலாகச் சொல்லிக் கொள்ளலாம். முகநூலில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஒருவரான எஸ்.எஸ். சிவசங்கர் சொல்லியிருப்பதுபோல் தமிழ்நாட்டின் எல்லாத் தொகுதிகளும் ஆர்.கே நகர் அல்ல. எல்லா தொகுதிகளிலும் தினகரனே வேட்பாளரும் அல்ல.

ஆனால் நிச்சயமாக ஆர்.கே. நகர் திமுகவுக்கு அடித்திருக்கும் எச்சரிக்கை மணி. அவர்களைப் பொறுத்தவரையில் பிளவுண்ட அதிமுகவை எதிர்த்தே  இடைத்தேர்தலில் பலகட்சிக் கூட்டணி அமைத்தும் வெல்லமுடியவில்லை. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஒருவேளை ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை எதிர்கொள்ள நேர்ந்தால் என்ன ஆகும் என்ற கேள்வி எழலாம். அதை வைத்துத்தான் அவர்களின் அடுத்த வியூகங்கள் வகுக்கப்படவேண்டும்.

ஆனால் தினகரனின் தோல்விக்குப் பின்னால் ஈ.பி.எஸ் & ஓ.பி.எஸ். வெளியிட்ட அறிக்கை தங்கள் தோல்விக்கு தி.மு.கவையே குறை கூறியது. தினகரனுடன் தி.மு.க கொண்ட ரகசிய உறவு என்று அவர்கள் சொல்லியிருப்பது தி.மு.கவின் அடிமடியில் கைவைப்பது. ஆனால் தி.மு.கவினர் இது பற்றிக் கேட்டால் பதறுகிறார்கள். ‘‘கடைசி நாள் வரை தொகுதியில் கால்வலிக்க நடந்து வாக்கு கேட்டிருக்கிறோம்,'' என்கிறார்கள். ஆனால் கட்சித் தலைமை வழக்கமாகத் தேர்தல்களில் செய்வதுபோன்ற ‘உத்திகளை' இத்தேர்தலில் செய்யவில்லை என்பதும் நிஜம்!

தினகரன் அதிமுகவைக் கைப்பற்றுவதற்கு ஆர்.கே நகர் தேர்தல் வழிகோலும் என்றால் இந்த இடைத்  தேர்தலில் மேலும் தீவிரமாக செயல்படாமல் போனது பற்றி தி.மு.க பின்னாளில் வருத்தப்பட நேரிடலாம். ஏனெனில் தற்போதைய அ.தி.மு.க தலைமையை விடத் தீவிரமான எதிராளியாக தினகரன் உருவெடுப்பார்!

தினகரனின் வெற்றிக்கு  இன்னொரு முக்கியமான காரணமாக அரசியல் நோக்கர் ஒருவர் அவரது ஊடகங்களை எதிர்கொள்ளும் திறனை முன்வைக்கிறார். இயல்பாக மனதில் உள்ளதை அப்படியே பேசுவதுபோன்ற அணுகுமுறை அது. வழக்கமான திராவிடக் கட்சிகளின் நீட்டி முழக்கும் எழுத்துநடைப் பேச்சு அல்ல. இது  மிகக் குறுகியகாலத்தில் ஓரளவுக்கு அவரது கட்சிக் காரர்களிடம் அவரைக் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது.  இதை அவசரமாக உள்வாங்கவேண்டிய கட்டாயத்தில் திமுக இருக்கிறது.

‘‘இயல்பாகப் பேசக்கூடிய இளம் முகங்களை இன்னும் அதிகமாக தி.மு.க களமிறக்க வேண்டும். இப்போதைய மூத்த தலைவர்களும்கூட தங்கள் ஊடக அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். கார்ப்பரேட் பாணி அணுகுமுறையை விட சற்று பளபளப்பாக இல்லாததுபோல் தோன்றினாலும்கூட கேட்போரின் இதயத்துக்குச் சற்று நெருக்கமாகும்படி பேச்சு மொழியில் கருத்துக்களை உரைக்கத் தொடங்கினால் அது சற்று பலனுள்ளதாக இருக்கும்'' என்றார் அந்த மூத்த அரசியல் நோக்கர்.

இது ஒரு கோணம் மட்டுமே. வலுவான கூட்டணி, அந்தக் கூட்டணிக்குள் சிறப்பான ஒருங்கிணைப்பு, பிரச்சாரத்துக்குப் பிரபலமான முகங்கள் என்று கடுமையான போராட்டத்துக்குத் தி.மு.க தயாரானால்தான் அடுத்தமுறை ஆட்சியைப் பிடிக்கமுடியும். அதற்கு இப்போதைய ஒரே ஆறுதல் ஆர்.கே நகர் தேர்தல் அன்று வெளியான 2ஜி வழக்கு விடுதலை! தி.மு.கவினர் இந்த விடுதலையில் இருந்து தொடங்கவேண்டும்! ஆர்.கே. நகர் தேர்தல் தோல்வியில் இருந்து அல்ல.

ஜனவரி, 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com